பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian Ma Subramanian

தமிழகத்தில் 6-12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை மடுவங்கரை உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் டெமனாஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ma Subramanian

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சென்னை 2.O திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹை-டெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது. 6-12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் .இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அனுமதி வந்தவுடன் தமிழகத்தில் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.