வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்தான விவகாரம் தொடர்பாக ஆலோசித்து முடிவு - துரைமுருகன்

 
duraimurugan duraimurugan

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ரத்து செய்துள்ள நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மிகவும் பிறபடுத்தப்பட்ட மற்றும் சாமிரபினருக்கான
 20 சதவத இடஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்திளருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை இரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.  எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த, அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

duraimurugan

ஆனால், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல
 சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்சநீதிமன்றத்தால் இச்சட்டம் இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. முதலமைச்சர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.