குடிநீர் திட்டங்களுக்கான நிதி அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

 
kn nerhu

குடிநீர் திட்டங்களுக்கான நிதி அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்  தலைவர்களுக்கான  நிர்வாக பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: பேரூராட்சி தலைவர் , துணைத் தலைவர் தங்களது பதவிக் காலத்தில் , அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் கலைஞர் மேம்பாட்டு திட்டம் மூலம் 450 கோடியில் பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்றுள்ளது. பேரூராட்சி தலைவர்கள் , பேரூராட்சியின்  அனைத்து பகுதிக்கும் சமச்சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோகம் தொடர்பாக  அதிகாரிகளுக்கு ஆலோசனை  வழங்க முன்வர வேண்டும். குடிநீர் திட்டங்களுக்கான நிதி அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கப்படும்.

KN Nerhu

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 40 சதவீத வாக்குகள் வரை, அதாவது 60 ஆயிரம் வாக்குகள் பேரூராட்சிகளில் இருக்கிறது.  ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைப்பது பேரூராட்சி தலைவர்களின் கைகளில்தான் இருக்கிறது. பேரூராட்சி தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டால் சட்டமன்ற உறுப்பினராக வர முடியும்  , அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு வர முடியும். தமிழகத்தில் மாநகராட்சிக்கு  நிகரான மக்கள் தொகை பேரூராட்சிகளிலும் இருக்கிறது. பிளாஸ்டிக் , கழிவு பொருட்களை மறுபயன்பாடு செய்வது தொடர்பாகவும், குப்பைகளை பிரிப்பது குறித்தும்  கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அவற்றை பற்றி குறிப்பெடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.