ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்க- இபிஎஸ் வலியுறுத்தல்

 
eps

ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்ய இந்த வீடியா அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதித்ததன் விளைவாக, பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்றவைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தன.முக்கியமாக, பகல் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பில் வந்த பணம், லாட்டரி என்ற அரக்கனிடம் சிக்கிச் சீரழிவதைத் தடுக்க மாண்புமிகு அம்பா அவர்கள் லாட்டரிச் சீட்டு தடைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினார்கள். ஆனாலும், கள்ளத் தனமாக லாட்டரி விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருவதை அறிந்த மாண்புமிகு அம்மாவின் அரசு, ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை, அவர்கள் யாராக இருந்தாலும், இரும்புக் கரம் கொண்டு அடக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்கி இருந்தது. இதன் காரணமாக, அம்மாவின் அரசில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை இல்லாமல் இருந்தது.

eps

 ஆனால், 2021-ல் மீண்டும் இந்த விடியா அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு நம்பர் லாட்டரி என்ற அரக்கனிடம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிச் சிரழிந்து வருகின்றனர். இதைத் தடுக்க, இந்த விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பேட்டி மற்றும் அறிக்கை வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இதுவரை இந்த விடியா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் குறிப்பாக, தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையாகிறது என்று நாளிதழ்கள் மற்றும் தனியார் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஒருசில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் உதவி இல்லாமல் ஒரு நம்பர் வாட்டரி விற்பனை சாத்தியமில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

எப்போதும் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல செயல்படும் இந்த விடியா அரசின், முதலமைச்சரின் கீழ் உள்ள காவல் துறை, கண் துடைப்புக்காக ஆப்பரேஷன் கஞ்சா 2.0. ஆப்பரேஷன் கட்டப் பஞ்சாயத்து ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டது போல், எப்போது ஆப்பரேஷன் ஒரு நம்பர் லாட்டரி 2.0 என்று நடவடிக்கையினை எடுக்கும் என்று தெரியவில்லை. 'ஆப்பரேஷன் வெற்றி-நோயாளி மரணம்' என்பதுபோல் தான் தற்போதைய காவல் துறையினரின் நடவடிக்கைகள் இருக்கிறது. ஒருபக்கம் ஆப்பரேஷன், மறுபக்கம் குற்றங்கள் பெருகி வருகின்ற நிலை, இந்த விடியா அரசின் நிர்வாகத் திறமை இன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எனவே, மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு மற்றும் எந்தவிதமான இதர லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்றும், இச்செயல்களில் ஈடுபடுவோர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.