டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே முக்கிய அப்டேட்.. ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நவீன காலத்திற்கு ஏற்ப தேர்வு நடத்தும் முறைகளில் ஒருசில மாற்றங்களைச் செய்து வருகிறது. தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டி தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும் , அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்கு (Onetime Registration) வைத்திருக்கும் அனைத்து தேவர்களும், தங்களது ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதாவது இன்று தான் கடைசி நாள். இச்சூழலில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் இணைக்காதவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குருப்-2, குருப்-2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்படும்.

TNPSC

இதனையொட்டி ஏராளமான தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்படி, அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேசமயம் குருப்-2, குருப்-2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தவறாமல் மார்ச் 23ஆம் தேதிக்குள் ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து அதன்பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.