அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை - டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்

 
ttv

அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அ.ம.மு.க.வில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களை வரச் சொல்லி இருக்கிறேன். அ.தி.மு.க.வினர் எங்கள் கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க முடியும். அ.ம.மு.க. வீரர்களின் பட்டாளம். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் விலகி செல்லும் சிலரால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது.  

அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். அ.தி.மு.க. இன்று தவறானவர்கள் கையில் உள்ளது. பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அ.தி.மு.க.வுடன் இணைவீர்களா? என்று அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேட்கிறீர்கள். எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது. நாங்கள் வளர்ந்து வரும் ஒரு இயக்கம். வரும் காலத்தில் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்கள் இயக்கம். அதை அடையும் வரை போராடுவோம். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.