மோடியை பங்கமாக கலாய்த்த டிவி ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியது!

 
ம்

போன மாசம் பிரதமர் மோடியை பங்கமாக கலாய்த்த ஜி தமிழ் டிவி ஷோ,  இந்த மாசம் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ என்ற குழந்தைகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.   இந்த நிகழ்ச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.   பாஜகவினர் இடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   எதிர்ப்பை அடுத்து இந்த நிகழ்ச்சியினை இந்தியிலும் டப் செய்து பலர் வெளியிட்டனர்.

மன்னரும் அமைச்சரும் பேசிக்கொள்வது போல் இரண்டு சிறுவர்களை வைத்து அந்த தொலைக்காட்சியின் காட்சி நிகழ்ச்சி அமைந்திருந்தது.   அதில் மன்னர், ‘’நமது நாட்டு வளர்ச்சியில் எது தடையாக உள்ளது..கறுப்பு பணம்.  அதனால எல்லா பணத்தையும் செல்லாது என்று அறிவிக்கப்போறேன்.  அப்படி செஞ்சா கறுப்பு பணம் ஒழிஞ்சிடும்ல..’’என்று கேட்க,  ’’இதே மாதிரிதான் ஒரு சம்பவம்.  சிந்தியாங்குற நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரித்தான் முட்டாள் தனமா பண்ணுறாரு. ’’என்கிறார் அமைச்சர். 

ட்வ்

’’கறுப்பு பணத்தை ஒழிச்சிட்டாரா?’’என்று மன்னர் கேட்க, ’’கறுப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு.  கலர் கலரா கோட் மாட்டிக்கிட்டுத்தான் சுத்துனாரு’’என்று அமைச்சர் சொல்ல,  நடிகை சினேகா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியாகி பின்னர் சிரித்தனர்.

‘’நமது ஆட்சியில் மக்களை சந்தோசமாக வைப்பதற்கு நாம் என்ன செய்வது?’’ என்று மன்னர் கேட்க,    ‘’நாம ஆட்சியில இல்லேன்னாலே  மக்கள் சந்தோசமாகத்தான் இருப்பாங்க’’ என்று அமைச்சர் சொல்ல,  அரங்கமே கைதட்டி சிரித்தது.

இதைக்கேட்டு மன்னர் கோபமாக,  ’’பின்னே என்ன மன்னா.. முன்பு அயல்நாட்டினரிடம் அடிமையாக இருந்தோம். இப்போது அயல்நாட்டு மன்னரிடம் அடிமையாக இருக்கிறோம்.   மக்களின் குறைகளை கேட்டால்தானே..’’ என்று சொல்கிறார் அமைச்சர்.  உடனே மன்னர், ’’நான் இப்போதுதான் நகர்வலம் சென்று வந்தேன்.  மக்கள் எல்லோரும் செல்பி எடுத்துக்கொண்டு சந்தோசமாகத்தான் இருக்காங்க’’என்று சொல்ல,  ’’மன்னா நம் நாட்டில் சென்றால்தான் அது நகர்வலம்.  நாடு நாடாக சென்றால் அது ஊர்வலம்.  அங்கே உங்க ஆட்சி இல்லை அல்லவா அதனால்தான் மக்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்’’என்று அமைச்சர் சொல்ல,  அரங்கத்தினர் கைதட்டி ஆரவாரித்தனர்.

’’அது சரி மன்னா.. ஏன் லாபத்தில் உள்ளதை விற்கிறீர்கள்?’’ என்று அமைச்சர் கேட்க,  ‘’என்ன அமைச்சு.. நஷ்டத்தில் உள்ளதை விற்றால் நாம எப்படி லாபம் பார்க்க முடியும்? ’’என்று கேட்கிறார்.  சரி வாங்க நாம நகர்வலம் செல்வோம்.  இப்படியே  சென்றால் மக்களை நம்மைகண்டு பிடித்துவிடுவார்களே என்று மன்னர் சொல்ல,  வடநாட்டில் செல்லும்போது மாறுவேடத்தில் செல்லுங்கள் என்று சொல்கிறார் அமைச்சர்.    அப்படியானால் தென்னாட்டில் என்று கேட்கும்போது,  ‘’தென்னாட்டில் நீங்க மன்னராவே சென்றாலே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்’’ என்று அமைச்சர் சொல்ல அரங்கத்தில் மீண்டும் சிரிப்பொலி.

சிறுவர்களை கொண்டு மன்னர் - அமைச்சரை என்று அந்த தொலைக்காட்சி இப்படி காட்சி எடுத்திருந்தாலும்,    பிரதமர் மோடியை கிண்டலடிப்பதாகவே உள்ளது என்று எல்லோருக்கும் புரிகிறது என்றார்கள் நெட்டிசன்கள்.   இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில், இதனால் கொதித்தெழுந்த தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை,   ‘’ மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்.  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்’’ என தெரிவித்திருந்தார்.

பாஜகவின் எதிர்ப்பினை அடுத்து, இந்த டிவி ஷோவினை சிலர் இந்தியிலும் டப் செய்து இந்தியா முழுவதும் பரப்பினர்.  இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து அதே ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ ஷோவில் நிகழ்ச்சி தயாரித்துள்ளது ஜி. தமிழ் தொலைக்காட்சி.

வி

 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதானத்தில் சாப்பிடச் சென்றபோது தன்னை முதல் பந்தியில் அமரக்கூடாது என்று சொல்லி கோயிலில் உள்ள சிலர் தடுத்து வெளியே அனுப்பி விட்டதாக வேதனையுடன் ஒரு வீடியோ பதிவில் தெரிவித்து இருந்தார். 

 நரிக்குறவர் அஸ்வினியின்  இந்த வீடியோ வைரல் ஆனது .  உடனே நடவடிக்கை எடுக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபுவிடம் முதல்வர் சொல்ல,  அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு குற்றச்சாட்டு,  புகார் தெரிவித்த அஸ்வினியுடன் அமர்ந்து சாப்பிட்டு,  சமபந்தி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று தெரிவித்தார் சேகர்பாபு.

இந்த நிகழ்வு பலரையும் நெகிழ வைத்தது.  திமுகவுக்கு பாராட்டுகளை குவித்தது.   இதன் பின்னர் பூஞ்சேரியில் உள்ள  நரிக்குறவர் அஸ்வினி வீட்டுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அஸ்வினிக்கு நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் ஆய்வுகளை செய்தார். இதன் பின்னர் மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர்கள், இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, நிலப்பட்டா , நல வாரிய அடையாள அட்டை என்று அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

 இந்த நிகழ்வை ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவில் குழந்தைகள் நிகழ்த்திக் காட்டினர்.   சமூக நீதி காத்த திமுக அரசை குழந்தைகள் பெருமைப்படுத்திய அந்த வீடியோ வைரலாகி வருகிறது.