ஜூன் 27 ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்..

 
தலைமைச் செயலகம்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27 ஆம் தேதி  கூடுகின்றது.  

வருகிற  திங்கட்கிழமை ( 27ஆம் தேதி )  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.   தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற இருக்கக்கூடிய இந்த கூட்டத்தில்  அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில்  சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்களுக்கான அனுமதி அளித்தல், பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்க ஒப்புதல் அளிப்பது , புதிய கொள்கைகள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

ஜூன் 27 ஆம் தேதி கூடுகிறது  தமிழக அமைச்சரவைக் கூட்டம்..

மேலும்,  பருவ மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்வது,  மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்துவது குறித்து அறிவுறுத்தப்படும் என்றும்,   நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்வது குறித்தும் முதல்வர் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.  அத்துடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரக்கூடிய காலங்களில் புதிதாக அமல்படுத்த இருக்கும் சட்ட மசோதாக்கள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்டம் பிறப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள குழு ஒருவாரத்தில் அறிக்கை  சமர்ப்பிக்க உள்ள நிலையில் அதுகுறித்து முடிவெடுக்கவும்,  தமிழகத்தில் பல்வேறு விசாரணை கமிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணை ஆணையங்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் கொள்கை ரீதியான  முடிவெடுக்கவும் வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் கடைசியாக கடந்த மார்ச் மாதம்  5 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 5க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.