தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் - மாநிலங்களவையில் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

 
  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..

சென்னை உயர்நீதிமன்றம் என்கிற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.  

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டிஷ் அரசால் சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டது.  அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தை குறிப்பிட்டு முதலில் ‘சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் அது மெட்ராஸ் ஹை கோர்ட் என்று அழைக்கப்பட்டது.  ஆனால் 1996ம் ஆண்டு மெட்ராஸ் என்பது சென்னை என பெயர் மாற்றப்பட்டு சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் மட்டும் அதிலிருந்து விலக்கு பெற்று தற்போது வரை ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ என்றே அழைக்கப்படுகிறது.  

சென்னை உயர் நீதிமன்றம்

இதனை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது.  உதராணமாக பிற மாநிலங்களில் மாநிலத்தின் பெயரை வைத்தே உயர்நீதிமன்றம் குறிப்பிடுகிறது.  கர்நாடகா உயர்நீதிமன்றம், மேகாலயா உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது.  இந்நிலையில்,  சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் ஹைகோர்ட்  என்கிற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

உயர் நீதிமன்றம்

மாநிலங்களவையில் ஆர்பிட்டரேஷன் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர்,  தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இந்த கோரிக்கையில் விரைவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர் தெரிவித்தார்.  மெட்ராஸ் என்கிற பெயர் தற்போது இல்லை என  நினைவுகூர்ந்த அவர்,   உயர்நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரிட வேண்டும் என விளக்கினார்.