4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..

 
தலைமை செயலகம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு நாளை மீண்டும் கூடுகிறது.  அதன்படி முதலாவதாக வருவாய்த்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது.  

தமிழக அரசின் 2022-2023ம் நிதியாண்டுக்கான   நிதிநிலை அறிக்கை  கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 19ம் தேதி  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெடடை  தாக்கல் செய்தார்.  அதன்பிறகு  மார்ச் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பொதுநிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் சபாநாயகர்  சட்டப்பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

சட்டப்பேரவை

.இதைத்தொடர்ந்து  மீண்டும்  கடந்த 6ம் தேதி காலை 10 மணிக்கு  தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில்  சட்டப்பேரவை கூட்டத்தொடர்  கூடியது. அன்று முதல்துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றது.  அதன்படி இறுதியாக கடந்த 13ம் தேதி வேளாண் துறை, மீன்வளத்துறை , கால்நடை மற்றும்  பால்வளத்துறைகள்  மானிய கோரிக்கைகள் மீதான  விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து சித்திரை திருநாள், புனித வெள்ளி , சனி மற்றும் ஞாயிறு என கடந்த 14ஆம் தேதி முதல் இன்று ( ஏப் 17 ) வரை சட்டபேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின்

விடுமுறை முடிந்து  மீண்டும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது.  கூட்டம் தொடங்கியதும் முதலில்  கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து  வருவாய்த்துறை   மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகியற்றின்  மானிய கோரிக்கைகள் மீதான  விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. 

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்து, துறை ரீதியான  முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் தெரிகிறது.  தொடர்ந்து வருகிற மே 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.