மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட வேண்டும் என அவசியம் கிடையாது - தமிழிசை

 
Tamilisai

ஆளுனருக்கு மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது, அதில் சில சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை கேட்பதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அவரை திரும்ப பெற வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வருகிறார்களே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய தமிழிசை கூறியதாவது:  அரசியல் ரீதியாக 'ஆன்லைன் ரம்மி' சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுனர் சில தகவல்களை சொல்லி இருக்கிறார். ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை. அவர்கள் அமைச்சரை அழைத்து சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். விளக்கம் கிடைத்ததும் அவர் அதற்கான முடிவு எடுக்கலாம். ஒரு ஆளுனருக்கு மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது. அதில் சில சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை கேட்பதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.