மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

 
stalin stalin

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஐநா சபையால் முன்னெடுக்கப்பட்டது. ”அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தீர்வுகள், அணுகக்கூடிய மற்றும் சமமான உலகத்தைப் படைப்பதில் புதுமையின் பங்கு” என்பதே இந்தாண்டுக்கான கருப்பொருள். இதனிடையே சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்களை தொடங்கி வைத்ததுடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார். மேலும், வேலை வாய்ப்புடன் கூடிய மென்பொருள் திறன் பயிற்சியையும் முதல் அமைச்சர் திறந்து வைத்தார். 

cm

இதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை அன்பு பாதை. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன். மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வுத் தொகை ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.