நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம் - முதலமைச்சர்

 
stalin

அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இதனிடையே அரசியலமைப்பு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.