டெல்லி சென்ற நான் யாருடைய காலிலும் விழவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

 
mk stalin

டெல்லி சென்ற தான் யாருடைய காலிலும் விழவில்லை எனவும் தமிழ்நாட்டின் உரிமைக்காக தான் டெல்லி சென்றதாகவும் எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை திருவான்மியூரில் உள்ள இராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார் இல்ல திருமணத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்தார். பின்னர் மணமகன் வினோத்குமார் மணமகள் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன், சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Wedding

விழாவில் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  நான் அண்மையில் துபாய் சென்ற போது பல கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கூட்டணிக் கட்சியினரே பதில் சொல்லி விட்டார்கள். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகராக இருக்கக்கூடிய டெல்லிக்கு நான் பயணம் மேற்கொண்டிருந்தேன். அங்கு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழ்நாட்டில் உரிமைக்காக குரல் கொடுத்தேன். அதை எல்லாம் மூடிமறைக்க, தாங்கிக்கொள்ள முடியாத சிலர், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக, ஏதோ சிக்கலில் இருந்து தப்பிக்க நான் டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறினார்கள்.

ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன் "டெல்லி சென்ற நான் யாருடைய காலிலும் விழவில்லை, தமிழ்நாட்டின் உரிமைக்காக தான் டெல்லி சென்றேன்." ஏன் என்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவியேற்ற போதே நான் சொன்னேன் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று. நான் கலைஞருடைய மகன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே என்றும் உழைப்பேன். இவ்வாறு கூறினார்.