100-வது நாளை எட்டும் ராகுல்காந்தியின் நடைபயணம் - கோலாகலமாக கொண்டாட கே.எஸ்.அழகிரி அழைப்பு

 
Ks Azhagiri

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நூறாவது நாளை எட்டவுள்ள நிலையில், இந்த பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்ப வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிற தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாளை டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமான நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் ராகுல்காந்தியின் 100 நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையிலும், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மகத்தான வெற்றி குறித்தும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.