தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

 
Rain

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

rain

 இதேபோல் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.