டூரை முடித்துக்கொண்து மெரினா வந்த அலங்கார ஊர்தி.. எத்தனை நாள் மக்கள் பார்வையிடலாம்?

 
தமிழ்நாடு அலங்கார ஊர்தி

இந்தாண்டு குடியரசு தினம் சர்ச்சை தினமாகவே இருந்தது. அன்றைய நாள் டெல்லியில் நடக்கும் விழாவில் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் அணி வகுப்பும், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக அம்மாநில அரசுகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பும் இடம்பெறும். இதற்கு தமிழ்நாடு சார்பிலும் வ.உ.சி., மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அலங்கார ஊர்தி அனுப்பப்பட்டது.ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்தது. முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியும் மத்திய அரசு முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. 

இது தமிழ்நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த ஸ்டாலின், "நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் சென்னையில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும்” என்றார். அதன்படி குடியரசு தினத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது.

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக மெரினாவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்து பார்வையிட்டனர். இந்த அலங்கார ஊர்தி இன்று முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.