நற்செய்தி! ஏப்ரலில் வெப்பம் குறையும், மழை அதிகரிக்கும்- வானிலை மையம்

 
Rain

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை விட குறைவாகவும், மழை இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு மாதத்திற்குமான வானிலை முன்னறிவிப்பை நீண்டகால முன்னறிவிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான  நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருப்பதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும், வடமேற்கு இந்திய பகுதி, மத்திய இந்திய பகுதி மற்றும் சில வடகிழக்கு பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

weather

மழைக்கான வாய்ப்பு இந்தியா முழுவதும் இயல்பை ஒட்டி இருக்க கூடிய சாதகமான சூழல்  இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதி மற்றும் இதனை ஒட்டிய மத்திய மேற்கு இந்திய பகுதிகளில் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  இந்திய பெருங்கடல் வெப்பநிலை தற்போது சமன் என்ற குறியீட்டில் உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் இதே குறியீட்டில் இருக்க கூடிய சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது. இந்திய வானிலை நிலவரம், இந்திய பெருங்கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால் இதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.