புனிதர் தேவசகாயம் பிள்ளைக்கு நன்றி விழா - அதிமுக வாழ்த்து!!

 
ops eps

உலக அளவில் தமிழகத்துக்கும், குமரி மண்ணுக்கும் கிறிஸ்தவ இறைத் தொண்டால் பெருமை சேர்த்த புனிதர் தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு நடைபெறும் தேசிய நன்றி விழா சிறக்க வாழ்த்துகிறோம் என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக வாழ்த்து கூறியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், " கன்னியாகுமரி மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம். தெற்கே இந்துமகா சமுத்திரமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே அரபிக் கடலும் இணைந்து முக்கடல் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி திகழ்கிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவற்றைப் பார்க்கும் சிறப்பு கன்னியாகுமரிக்கு உண்டு.இத்தகைய சிறப்புகளுக்குரிய கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழுக்கு மணிமகுடம் சூட்டுகின்ற வகையில் கிறிஸ்தவ இறைத் தொண்டால் பெருமை சேர்த்தவர் புனிதர் தேவசகாயம் பிள்ளை அவர்கள்.அன்பு சகலத்தையும் மன்னிக்கும்; அன்பு சகலத்தையும் தாங்கும்; உத்தமமும் நீதியும் நியாயமுமாய் நடக்க வேண்டும். உன்னிடத்தில் அன்பு கூறுவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக போன்ற வேத வசனங்களின்படி வாழ்ந்து காட்டியவர் புனிதர் தேவசகாயம் பிள்ளை அவர்கள். 

tn

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலத்தைச் சேர்ந்த வாசுதேவன்-தேவகி அம்மாள் தம்பதியரின் மகன் நீலம் என்ற நீலகண்டனாக 1712-ல் பிறந்தவர் தேவசகாயம். இவர், திருவிதாங்கூர் மன்னரிடம் பணியாற்றிய போது, அங்கு டச்சு நாட்டைச் சேர்ந்த தளபதி பெனடிட் டிலனாயுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கிறிஸ்தவரான அவர் மூலம் இயேசுபிரானின் போதனைகளை அறிந்து, அவற்றால் ஈர்க்கப்பட்டு வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தில் திருமுழுக்கு பெற்று தேவசகாயம் என்ற பெயருடன் கிறிஸ்தவரானார். அவரது மனைவி பார்கவியும் ஞானப்பூ என்ற பெயரில் கிறிஸ்தவரானார். தேவசகாயம் கிறிஸ்தவ நற்செய்தியைப் பரப்பினார். சமூக நீதியை, சம நீதியைப் பேணும் வகையில், தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக உழைத்த அவர் ராஜ துரோகியாக, குல துரோகியாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனாலும், அவர் நற்செய்தி அறிவிப்பதைத் தொடர்ந்தார். தன்னை பிரச்சினைகளின் தாக்கத்தால் நாடி வந்தவர்களுக்கு இயேசுவிடம் வேண்டுதல் செய்து, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி, குறைகளைப் போக்கி அற்புதங்கள் செய்தவர் தேவசகாயம். ஆனாலும், ஆதிக்க சக்திகளின் கடும் கோபத்திற்கு ஆளான அவர், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு 1752-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் ஆரல்வாய்மொழி அருகில் உள்ள காற்றாடி மலையில் படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வேத சாட்சியாக வாழ்ந்து உயிர் துறந்த அவரது உடலை படை வீரர்கள் வனவிலங்குகளுக்கு இரையாகப் போட்டனர். அற்புதங்களும், அதிசயங்களும் இறை வழிபாட்டின் மூலம் நிகழ்த்திய தேவசகாயம் பிள்ளை அவர்கள், அன்று முதல் இன்று வரை அனைத்து மக்களாலும் புனிதராகக் கருதப்பட்டு வந்தார். இவர் செய்த அற்புதத்தை 2014-ஆம் ஆண்டில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கீகரித்தார். இதுதான் அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு 15.5.2022 அன்று வாடிகனில் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

tn

இந்தியாவில், தமிழ் நாட்டில் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாமானிய நபருக்கு புனிதர் பட்டம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் வரலாற்றுச் சிறப்பைப் படைத்திருக்கிறார் புனிதர் தேவசகாயம் பிள்ளை அவர்கள். புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வால் தமிழன்னை பெருமை அடைகிறாள்; தமிழ் பெருமை அடைகிறது. கிறிஸ்தவ இறைப் பணியால் மக்கள் மனதில் என்றென்றும் நிறைந்திருக்கிறார் தேவசகாயம் பிள்ளை அவர்கள். இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள புனிதர் தேவசகாயம் அவர்களுக்கு நாளை (5.6.2022), தேசிய அளவில் மாபெரும் நன்றி விழா நடத்தப்படுவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விழா ஆரல்வாய்மொழியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோட்டார் மறை மாவட்டமும், குழித்துறை மறை மாவட்டமும் இணைந்து செய்து வருவதாகத் தெரிகிறது. உலக நாடுகளைச் சார்ந்தவர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிகிறது. விழா சிறக்க எங்களது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.