பசுமை தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர்!!

 
mk Stalin biopic

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (24.9.2022) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
 
வனங்களின் சுற்றுச்சூழல், சமூகத்திற்கு தூய காற்று, நீர் வளங்கள், வளமான மண், உயிர்ப்பன்மை, வாழ்வதற்கேற்ற சூழல் போன்றவற்றை வழங்குகின்றன. மேலும், கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்துல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சூழலமைப்பு சேவைகளை வனங்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வனச்சூழலை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

stalin

"தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்" என்று 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழகத்தில் வனப் பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் "பசுமை தமிழ்நாடு இயக்கம்" தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.நாட்டுமர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்த இயக்கத்தின் கீழ், அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புர பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும். மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும். பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

stalin
நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களைக் கண்காணிக்க, பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக www.greentnmission.com என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத்திறன் (Survival Rate) போன்றவற்றை கண்காணிப்பதற்கு அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன.பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவர் (Digital Wall), எண்ம நூல்கள் (Digital Book) போன்றவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். மேலும், இந்நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர், பசுமையாக்கல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளில் சிறந்த முறையில் பங்காற்றிய விவசாயிகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு தங்களது பங்களிப்பாக, ஹுண்டாய் இந்தியா மோட்டார் நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயும், மணலி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் 35 லட்சம் ரூபாயும், பசுமை சுற்றுச்சூழல் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாயும், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் 15 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 46 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்ட நாளான இன்று, அனைத்து மாவட்டங்களிலும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.