"நெல் கொள்முதல் செய்யமறுத்து விவசாயிகளை வதைக்கும் விடியா அரசு" - சாடும் மக்கள் நீதி மய்யம்!!

 
tn

அனைத்து நெல் கொள்முதல் கிடங்குகளையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

paddy procurement

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதுபோல் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அரசு கிடங்குகளில் சேர்க்கும் நெல் மூட்டைகளுக்கு, முறைகேடாக ஒரு மூட்டைக்கு ரூ.35/- இன்றும் கமிஷன் அடிக்கப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனாலும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.

paddy

நெல் கொள்முதல் செய்த பிறகும் நெல் மூட்டைகள் சரியாக சேமிக்கப்பட்டு அனுப்பப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் கள ஆய்வு செய்த நாகை மாவட்டத்தில் உள்ள மருதூர் வடக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கிய நெல் மூட்டைகளை அங்கேயே வைத்துக் கொண்டு, அதனை அனுப்ப வேண்டிய இடங்களுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி, அடுத்தடுத்து வரும் விவசாயிகள் கொண்டுவரும் மூட்டையையும் பெறாமல் அவர்களை அலைக்கழிப்பதை பார்க்க முடிந்தது.அதே நாகை மாவட்டத்தில் இருக்கும் வேட்டைக்காரணிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் கிடங்கு சுமார் 375 கோடிக்கு கட்டப்பட்டு  முழு பயன்பாட்டிற்கு இன்னும் வராமல் இருக்கிறது.

paddy

விவசாயிகளிடம் பெறப்படும் நெல் மூட்டைகளை அனுப்ப வேண்டிய இடங்களுக்கு அனுப்புவதற்கு அங்குள்ள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளை அலைக்கழிக்காமல், கட்டப்பட்டுள்ள அனைத்து நெல் கொள்முதல் கிடங்குகளையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கடுமையாக உழைத்து நம்மை பசியாற்றும் விவசாயிகளிடம் ஒவ்வொரு மூட்டைக்கும் முறைகேடாக லஞ்சப் பணம் பெறாமல் இருக்க வேண்டும் "என்று கோரிக்கை விடுத்துள்ளது.