நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த பேருந்து.. ஜன்னல் வழியே குதித்து உயிர் தப்பிய 40 பேர்..

 
நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த பேருந்து.. ஜன்னல்  வழியே குதித்து உயிர் தப்பிய 40 பேர்..

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே  திருமண வரவேற்பு நிகழ்சிக்கு சென்று வந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு எற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில், செங்கோட்டை என்பவரது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக,  காஞ்சிபுரத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் மணமகளின் உறவினர்கள் வந்துள்ளனர். நண்பர்கள், உறவினர்கள் என  40 பேர் அந்த பேருந்தில் பயணித்துள்ளனர்.  திருமண நிகழ்ச்சி முடிந்து  இரவில் அனைவரும்  ஊர் திரும்பியுள்ளனர்.  அப்போது,  வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கூட்டு சாலையில்  சென்றுகொண்டிருந்த போது திடீரென பேருந்தின் டயர் வெடித்ததால்,  கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதி நின்றுள்ளது.

நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த பேருந்து.. ஜன்னல்  வழியே குதித்து உயிர் தப்பிய 40 பேர்..

அத்துடன் பேருந்தும் தீப்பிடித்துள்ளது.  ஆனால் முழுமையாக குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து என்பதாலும், அனைத்தும் மூடப்பட்ட கண்ணாடி என்பதாலும் பயணிகளால் பேருந்தில் இருந்து வெளியேறமுடியாமல் போனது.  இதனால் பயணிகள் அனைவரும் செய்வதறியாமல் தவித்த நிலையில், அவ்வழியே வந்த லாரி ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுத்தி, இரும்பு ராடால்   பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து அவர்கள் வெளியேற வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.  இதனையடுத்து பயணிகள் அனைவரும் ஜன்னல்  வழியே குதித்து உயிர்தப்பினர்.

பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த  தீயணைப்புத்துறை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இருந்தபோதிலும் இந்த தீ விபத்தில் 4 காயமடைந்தனர். அத்துடன்  ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறிய போது காயமடைந்த இருவர் உள்ளிட்ட அனைவரும்  வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திடீர் தீ விபத்தினால்  வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் 1கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.