“ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய்” - முதலமைச்சர் ஸ்டாலின்

 
tn

ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  அப்போது ஆளுநர் சென்ற கான்வாய்க்கு எதிரே குழுமிய போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசியதுடன் , கருப்புக்கொடி கம்புகளையும் வீசியதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் சட்டப்பேரவையில் இன்று ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளுநர் பாதுகாப்பில் உரிய ஏற்பாடுகளை காவல்துறை செய்யவில்லை . ஆளுநருக்கே  பாதுகாப்பு இல்லாத போது,   மக்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கும்? என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

tn

இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து விளக்கமளித்து பேசிய  முதல்வர் ஸ்டாலின், "ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஆர்ப்பாட்டத்தின்போது ஆளுநர் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான குற்றம்; எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆளுநர் கான்வாய் அந்த இடத்தை கடந்துவிட்டதாக ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியே விளக்கம் அளித்துள்ளார் மயிலாடுதுறையில் ஆளுநருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது .ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் கட்டுப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

mk stalin

ஆளுநரின் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது; இதில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது.  நமக்கு இதுதான் வாய்ப்பு என இதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளின் இயல்பு தான்; வழக்கம் போல் சேர்ந்தே அறிக்கை விடும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளனர். ஆளுநர் விவகாரத்தில் விடியா அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி, எனது பதிலைக் கேட்காமலேயே வெளியில் சென்றுள்ளார்.  அரசின் விளக்கத்தை கேட்ட பின், அதில் உடன்பாடு இல்லையென்றால் தான் வெளிநடப்பு செய்ய வேண்டும்; அதுவே மரபு" என்றார்.