ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஓராண்டில் 28 பேர் பலி - மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா?

 
Online Rummy - Anbumani Ramadoss

சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். 20 வயதான இவர் தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் . மாணவர் சூரிய பிரகாஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அவர் , 75 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில்  இழந்துள்ளார்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் சூரிய பிரகாஷ் ,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆத்தூர் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

rummy

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர்  பக்கத்தில்,  "சேலம் மாவட்டம் ஆத்தூர் சதாசிவபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சூரியபிரகாஷ் ஆன்லைன்  சூதாட்டத்தில் ரூ.75,000 இழந்ததால் நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது! 

anbumani

சூரியபிரகாஷ் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக வைத்திருந்த பணத்தை சூதாடி இழந்திருக்கிறார் என்பதிலிருந்து ஆன்லைன் சூதாட்டம் மாணவர்களையும் அடிமையாக்கியுள்ளது; கல்லூரி கட்டணத்திற்கான பணத்தை வைத்து சூதாடும் அளவுக்கு போதையாக்கியுள்ளது என்பதை அறியலாம்! ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஓராண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது ஒரு தற்கொலை முயற்சியும் நடந்துள்ளது. 



இவ்வளவுக்குப் பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என்றால், மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா? என்ற வினா எழுகிறது! ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இன்றுடன் 90நாட்களாகி விட்டன. அமைச்சரவையில் இரு முறை விவாதிக்கப்பட்டாகிவிட்டது.  இனியும் தயக்கம் ஏன்? இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.