நாய்க்குட்டிகளை காவல்காத்த பாம்பு.. கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்..

 
நாய்க்குட்டிகளை காவல்காத்த பாம்பு..  கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்.. 

கடலூர் அருகே நாய்க்குட்டிகளை நல்ல பாம்பு ஒன்று பாதுகாத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

கடலூர் மாவட்டம்  பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்பவர், அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றை  கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில்,  நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்று பாதுகாப்பாக அந்த பள்ளத்தில்  வைத்துவிட்டு சென்றுள்ளது. அப்போது அங்கு  வந்த நல்ல பாம்பு ஒன்று, அந்த  நாய் குட்டிகளை பாதுகாத்தபடி அதன் அருகிலேயே  இருந்தது.  பொதுமக்கள் யாரையும் அந்தக்  குட்டிகளிடம்  நெருங்கவே விடவில்லை..   படமெடுத்தபடி  கம்பீரமாக நாய்க்குட்டிகளின் முன்னால் நின்று  பாதுகாத்துக்கொண்டிருந்தது.  

நாய்க்குட்டிகளை காவல்காத்த பாம்பு..  கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்.. 

அப்போது  வெளியே சென்றிருந்த தாய் நாய் அங்கு வந்ததும்,  குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து அருகில் செல்ல முயன்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் நெருங்கவிடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. தாய் நாயின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது நல்ல பாம்பு ஒன்று நாய்க் குட்டிகளை பாதுகாத்து காவல் காத்துக்கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.  மேலும் இது குறித்து  வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த  கடலூர் வன அலுவலர் செல்லா,  அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து  வனத்தில் பாதுகாப்பாக விட்டார்.  இந்த சம்பவத்தால் பாலூர் பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.