அதிமுக பொதுக்குழு வழக்கு - இபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை

 
eps

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. 

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

Madras Court

இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 18-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் விஜய் நாராயண் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.   இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் திங்கட்கிழமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து செயல்படாத நிலை இருக்கும்போது இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்கிற தனி நீதிபதியின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.   நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.