திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

 
thiruvannamalai

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், உலக பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொறு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவினை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா எளிமையான முறையில் நடைபெற்றது. சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. 

thiruvannamalai

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் வழக்கம் போல் மாட வீதியில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று  விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  தொடர்ந்து நாளை காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி  நடைபெறவுள்ளது. விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.