சென்னையில் தக்காளி விலை குறைந்தது - மக்கள் நிம்மதி

 
tomotto

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து சற்று அதிகரித்ததை தொடர்ந்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் வரை குறைந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கோயம்பேடு சந்தையில் நாளொன்றுக்கு 80 லாரிகளில் இறக்குமதியான தக்காளி கடந்த ஒரு மாதமாக 30 லாரி என்றளவிலேயே இறக்குமதியாவதால் வரத்து குறைவு காரணமாக தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா , கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று 340 டன் வரை தக்காளி இறக்குமதியாகியிருந்த நிலையில் இன்று 390 டன்னாக தக்காளி இறக்குமதி சற்றே அதிகரித்துள்ளதால் விற்பனை விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் தக்காளி மொத்த விற்பனையில் கிலோ 80 ரூபாயாகவும் , சில்லரை விற்பனையில் கிலோ 90 முதல் 110  ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. 

இதேபோல் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்தது. கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து விலை உயர்ந்து வரும் பீன்ஸ் மொத்த விற்பனை விலையில்  கிலோவுக்கு 110 ரூபாயாகவும் சில்லரை விற்பனையில் 130 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் பீன்ஸ் கிலோவுக்கு 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று மொத்த விற்பனை விலையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான அவரைக்காய் இன்று ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்து கிலோவுக்கு 100 ரூபாயாக மொத்த விற்பனையிலும்  சில்லரை விற்பனையில் 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.