ஆழியார் குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

 
kurangu aruvi

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆழியார் குரங்கு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் கவியருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆழியார் அணையை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள குரங்கு அருவியிலும் குளித்து மகிழ்வது வழக்கம். 

இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான வால்பாறை கவர்கல் மற்றும் சக்தி எஸ்டேட் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. இதனால் ஆழியார் குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக குரங்கு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குரங்கு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த அருவில் உள்ள நிலையில், வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.