சென்னை மக்களின் கவனத்திற்கு! அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

 
Anna salai Anna salai

சென்னையில் அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகர போலீசார் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்தியுள்ளனர்.

சென்னையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் அண்ணாசாலையும் ஒன்று. மழைக்காலங்களில் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநகர போலீசார் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்தியுள்ளனர். அதன் படி மவுண்ட் ரோட்டில் இருந்து அண்ணா சாலை வழியாக ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், திரு.வி.க சாலை வழியாக திருப்பி விடப்பட்டு ஒயிட்ஸ் ரோடு வழியாக ஜெமினி மேம்பாலத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

Anna salai

அண்ணா சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்கல் காரணமாக, அண்ணா மேம்பாலம் வரை போக்குவரத்து நெரிசலால் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் நிலவுவதாலும், அதனை குறைக்கும் முயற்சியாக, தற்காலிகமாக இந்த வழித்தட மாற்றம் நேற்று முதல் துவங்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் , நெரிசலை குறைத்தால், இது தொடர்ந்து நடைமுறைக்கு வரும் எனவும் அடுத்து வரும் நாட்களில், அண்ணா சாலையில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு எதிர் திசையில் உள்ள பகுதிகளுக்கு செல்வோருக்கென ஒரு பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இன்றி வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியும் எனவும், அதற்கு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதே போன்று தான் மவுண்ட் ரோடு பகுதியிலும்,  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அண்ணா மேம்பாலம், ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தேவி தியேட்டர் சாலையில் செல்லாமல், டேங்கர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு பிளாக்கர்ஸ் சாலை வழியாக ஓமந்தூரார் மருத்துவமனை பகுதியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.