பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் - உதவிக்கரம் நீட்டும் நாம் தமிழர் கட்சி!!

 
seeman

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி உதவிப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, மாவு, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களும், துயர்துடைப்பு உதவிப்பொருட்களும் சேகரிக்கப்பட்டு இலங்கையில் உள்ள நம் ஈழச்சொந்தங்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேரறிவிப்பையடுத்து, திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்களை வாகனத்தின் மூலம் சென்னை திருவொற்றியூர், இராதாகிருஷ்ணன் நகர் எல்லையம்மன் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொருட்கள் பிரித்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட நிர்வாகிகள், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இர.கோகுல், திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் ம.சந்திப்பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.இதே போன்று மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் துயர்துடைப்புப் பொருட்களும் கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு, உதவிப்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு, கப்பல் மூலமாக அனுப்புவதற்கு ஏற்ப முறையாக பெட்டிகளிலும் பைகளிலும் அடைக்கப்பட்டு கன்டெய்னரில் அனுப்பப்படவிருக்கிறது.

எனவே, மற்ற மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் வாகனம் மூலம் கொண்டுவருவது குறித்த விவரங்களைத் தலைமை அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரியப்படுத்தியவுடன், அதனை சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.