துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா - புதிய வகை கொரோனாவா என ஆய்வு

 
Corona

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளில் சிலருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவை புதிய வகை கொரோனாவா? என்பதை கண்டறிய மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே அவர்களுக்கு வந்திருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே நேற்று சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது மாதிரிகளும் மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்றான பிஎஃப் 7 தொற்று உள்ளதா என்பது தெரியவரும்.