உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்

 
student

தமிழகத்தில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஆங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் கிவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதேபோல் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு விமானப் படை விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. உக்ரைன் அண்டை நாடுகளான போலந்து, பெலாரஸ், மால்டோவா உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்டு வருகிறது.. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. 

ukraine

மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து டெல்லி வந்த தமிழக மாணவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அதிகாரிகள் வரவேற்றனர்.மாணவர்களை கண்டதும் குடும்பத்தினர் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

stalin

இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த மாணவி உஷா கூறுகையில், தங்களை பாதுகாப்பாக  மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். போரால் உடமைகளை எடுக்க முடியாமல் உடுத்திய துணியுடன் வந்து உள்ளதாக கூறிய அவ்ர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் படிப்பை தொடர உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.