பள்ளிக் கல்வியில் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் - வெங்கையா நாயுடு

 
venkaiah naidu

பள்ளிக் கல்வியில் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை ஏற்படுத்துவதே முக்கியம் எனவும் துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த காயாரில் வேலுார் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பள்ளியின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பள்ளியை திறந்து வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் தி.மு.க., எம்.பி., செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது: பள்ளிக் கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதற்கு நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது அரசு, தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். மாணவா்கள் அவா்களது சமூகச் சூழல், பள்ளி வளாகம், அனைத்து கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் வீடுகளில் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்.
ஒருவா் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாசார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்துகொள்ளவும் உதவும். கல்வி என்ற பெயரில், மாணவர்களை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் கட்டுப்படுத்த கூடாது. இயற்கையின் மடியில் நேரத்தை செலவிட வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவுகளுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். பல்வேறு கைவினைகளையும், வர்த்தகங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். கள நடவடிக்கைகள், சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக சேவை ஆகியவற்றை, வகுப்பறை நிகழ்ச்சிகளில் சேர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இவ்வாறு கூறினார்.