பொதுமக்களை பாதிக்காதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்..

 
vijayakanth


பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை வரவேற்கிறேன். அதேசமயம் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பொதுமக்களை பாதிக்காதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்  - விஜயகாந்த் வலியுறுத்தல்..

 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் மற்றும் ஆலடி ரோட்டில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த  அப்பகுதி மக்கள்,  தங்களுக்கு மாற்று இடம்  கேட்டும், கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றபோது, அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் முகத்தில் பட்டதில் கண் எரிச்சலுடன் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவதற்கு முன்பு, அங்கு வசிக்கும் மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான மாற்று இடத்தையும் ஏற்படுத்தி தரவேண்டியது தமிழக அரசின் கடமை. அதே சமயம் பொதுமக்களும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து தாங்களாகவே வெளியேறி, தமிழக அரசு ஒதுக்கும் இடங்களில் குடியேற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களை பாதிக்காதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்  - விஜயகாந்த் வலியுறுத்தல்..

 அப்போதுதான் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் மழைநீர் வீடுகளில் புகுவதை தடுக்க முடியும்.  அண்டை மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தும் நிலையும் மாறும். எனவே மழைநீரை சேமித்து வைக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  மேலும் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் தமிழக அரசும் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நீர்நிலைகளில் வீடுகளை கட்ட அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு சட்டவிரோதமாக அனுமதி வழங்குவதோடு மின் இணைப்பு, குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தி தருகின்றனர். பல ஆண்டுகள் அங்கு வாழ அனுமதித்துவிட்டு பிறகு அப்புறப்படுத்தும் போதுதான் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரசுக்கு சொந்தமான இடங்களில் வருங்காலங்களில் வீடுகளையோ, கடைகளையோ அமைக்க முதலிலேயே அனுமதி வழங்க கூடாது.  அனுமதி அளித்துவிட்டு  பிறகு அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  ஊழல்வாதிகளால் தற்போது பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே எதிர்வரும் காலங்களில் நீர்நிலைகளில் வீடுகளை கட்ட அனுமதிக்க கூடாது.”என்று குறிப்பிட்டுள்ளார்.