செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர் திறப்பு.. மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை..

 
 செம்பரம்பாக்கம் ஏரியில் 100கன அடி நீர் திறப்பு


செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 மாண்டஸ் புயல் காரணமாக  கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை  மையம்  எச்சரிக்கை விடுத்துள்ள  நிலையில், சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர்  உள்ளிட்ட  பகுதிகளில்  நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் புறநகர் பகுதிகளில் உள்ள  செம்பரம்பாக்கம் , பூண்டி, புழல் ஏரிகளுக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 3 ஏரிகளிலும் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதாக  மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.  

புழல் ஏரி

அதன்படி  இன்று நண்பகல் 12 மணியளவில் முதல்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம்  குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள  செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.  24 அடி உயர நீர்மட்டம் கொண்ட  இந்த ஏரியில் இருந்து கடந்த காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது  ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக உள்ள நிலையில்,  22 அடியில்  நீர்மட்டத்தை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

பூண்டி ஏரி

தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்,   அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  கனமழை எச்சரிக்கை காரணமாக புழல் ஏரியில் இருந்தும்  வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் வெளியேற்றப்படுவதால்  கால்வாய் ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.