ஆளுநரின் தேநீர் விருந்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!!

 
tn

ஆளுநரின் தேநீர் விருந்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் கடந்த 14ஆம் தேதி மாலை தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில் பங்கேற்க அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தமிழக ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார்.  இந்த தேநீர் விருந்தை  திமுக ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அறிவித்த நிலையில் ஆகிய கட்சிகள்  புறக்கணித்தன.

stalin

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், "தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது; நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொதுமேடையிலேயே அவர் பாராட்டி பேசியிருக்கிறார்; ஆளுநருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம். ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரன்றி முடங்கிக்கிடக்கின்றது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்?  நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும். கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஏராளமான வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன், அது எனக்கு ஒரு பொருட்டல்ல; எல்லா வலிகளையும் அவமானங்களையும் புறந்தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே; அப்படித்தான் நான் செயல்படுகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் கிடைக்கிறது என்றால் நான் வலியையும், அவமானத்தையும் தாங்கிக் கொள்வேன். நீட் விலக்கு மசோதா  கிடப்பில் கிடப்பது குறித்து தேவைப்பட்டால் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

rn ravi

இதனிடையே சட்டப்பேரவையில் நீட் விலக்கு  மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,  அதை ஆளுநர் தமிழக அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பினார்.  இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு,  சட்டப்பேரவையில் மீண்டும் நீட் விலக்கு  மசோதா நிறைவேற்றப்பட்டு  ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நிலையில் தேநீர் விருந்து புறக்கணிப்பால்,  இந்த மசோதாவை தற்போது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.