கேரளாவுக்கு வேலைக்கு போக எதுக்கு இந்தி படிக்கணும்? நடிகர் சத்யராஜ்

 
ச

கேரளாவுக்கு வேலைக்குப் போவதற்கு எதுக்கு இந்தி படிக்கணும்? என்று கேட்டார் நடிகர் சத்யராஜ்.  ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதை அடுத்து, தமிழ்தான் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பலரும் இங்கு அமித்ஷா சொன்னதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் மொழி திணிப்பு விவகாரம் குறித்து சத்யராஜும் பேசினார்.

’இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’என்ற புத்தகத்தின் அறிமுக விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது.  நீலகிரி எம். பி.   ஆ. ராசா, நடிகர் சத்யராஜ் ,எழுத்தாளர் பாமரன், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,   உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

ப்

 நடிகர் சத்யராஜ் பேசும்போது,   ’’புரட்சித் தமிழன் என்ற அடைமொழி எனக்கு பொருத்தம் இல்லை.   நான் ஒரு புரட்சியும் செய்யவில்லை .  ஆனால் இனமுரசு சத்தியராஜ் என்கிறார்கள்.   திராவிட மாடலுக்கு துணையாக நிற்பவன் என்பதால் இனமுரசு என்பது சரியாக இருக்கும் என்றார்.

 தொடர்ந்து பேசியவர்,    ’’சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் என்பதிலிருந்து தான் கடவுள் மறுப்பை பெரியார் பேசுகிறார்.  பெரியாராக நடிப்பதில் எனக்கு கஷ்டமாக இருந்தது.  பெரியாராக இருப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும்’’ என்று பேசியவர்,    ’’பெரியார் படத்தில் நடித்தபோது ஷூட்டிங்கின்போது முட்டையும் தக்காளியும் என் முகத்தில் வீசினார்கள்.  அந்த வாசம் பத்து நாள் வரைக்கும் இருந்தது.  ஆனா உண்மையிலேயே இதை அனுபவித்து இருந்த பெரியார் இவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு மனிதநேயத்தை வளர்த்திருக்கிறார்’’ என்றார்.

மேலும்,   ’’மொழி எது வேண்டுமோ அதை படித்துக்கொள்ளலாம்.  அதற்காக கேரளாவுக்கு வேலைக்குப் போவதற்கு எதற்கு இந்தி படிக்க வேண்டும்?’’என்று கேட்டார். ’’சாஸ்திரம், சம்பிரதாயம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் இதெல்லாம் மனதிற்கு குடைச்சல் கொடுக்கும் மன விலங்கு.  இந்த மன விலங்குகளை உடைக்க ஒரே ஆயுதம் பெரியார் சிந்தனைகள்.  எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் மூடநம்பிக்கைகள் பல்வேறு பெயர்களில் உள்ளே புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும்’’ என்றார் சத்யராஜ்.