மாணவி தற்கொலை வழக்கில், பள்ளி நிர்வாகிகளை கைது செய்தது ஏன்?? - ஹைகோர்ட் கேள்வி..

 
Highcourt

கள்ளக்குறிச்சி  கனியாமூர் மாணவி தற்கொலை வழக்கில்  பள்ளி நிர்வாகிகள் 5 பேரை கைது செய்தது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த  அவர், 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியதையடுத்து,  மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி   ஏராளமான  இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்
 
பின்னர் அந்தப் போராட்டம்  கலவரமாக மாறியது.  அதில் பள்ளி முழுவதுமாக சூறையாடப்பட்டது.   இந்நிலையில்  மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  
 கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்
 பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கேட்டு, கடந்த மாதமே விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்திருக்கின்றனர்.  இந்த மனு மீது  ஏற்கனவே மூன்று முறை விசாரணை நடத்தப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில்,  கடந்த வாரம் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து  ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தனர்.   இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  அப்போது கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர்,  முதல்வர்,  ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும் இது தொடர்பாக நாளை மறுநாள் விளக்கம் அளிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும்  என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.