லாரி ஏறியதில் 10 மாத குழந்தை உயிரிழப்பு! திருப்பூரில் சோகம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே லாரி ஏறி குடும்பத்துடன் மரம் வெட்டும் கூலி தொழிலாளியின் 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன் (31). இவரது மனைவி அம்சவள்ளி (25) மற்றும் 10 மாத பெண் குழந்தை பவி யாழினி ஆகியோருடன் ஊர் ஊராக சென்று மரம் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களாக வெள்ளகோவில் அருகே கம்பளியம்பட்டியில் வளையக்காட்டு தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் மரம் வெட்டி வந்துள்ளார். இவர்கள் மரம் வெட்டும் நேரத்தில் அவர்களது 10 மாத பெண் குழந்தை பவியாழினியை அருகே உள்ள மரத்தின் நிழலில் உறங்க வைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை லோடு ஏற்றிய லாரி காட்டிற்குள் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக மரத்தின் அடியில் தூங்கி கொண்டிருந்த குழந்தை மீது ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுநரான குண்டடத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.