செக்கிழுத்த செம்மலுக்கு 140 அடியில் பிரம்மாண்ட சிலை! குடியரசுத் துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார்..!
மதுரை வண்டியூர் பகுதியில், ‘செக்கிழுத்த செம்மல்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு நூற்று நாற்பது அடி உயரச் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த 140 அடி உயரச் சிலை ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சி. சண்முகம் முன் முயற்சியில் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலை அமைப்பதற்கான கட்டுமான பணி துவக்க விழாவில் இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''செல்வச் செழிப்பிலும் இன்ப வாழ்விலும் திளைத்து வாழ்ந்திருக்க கூடிய நிலையில் இருந்தும் தம் வாழ்வை சமூகத்திற்கும், நாட்டிற்கும் அர்ப்பணித்து தன் செல்வங்களையெல்லாம் துறந்து, கொடுமையான துன்பங்கள் மற்றும் இன்னல்களை தாங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை'' என்று புகழாரம் சூட்டினார்.
இந்த விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு & பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் L .முருகன், ஏ.சி.எஸ். அறக்கட்டளை நிறுவனர் ஏ.சி. சண்முகம், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், செங்கோல் ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், திரைப்பட இயக்குநர் சுந்தர் சி, திரைப்பட நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

