சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்! நொடியில் தப்பிய 3 உயிர்கள்

 
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

திருத்தணி அருகே தேசியநெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென்று தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த மத போதகர்கள் 3 பேர் உயிர் தப்பினர். சென்னை சிஎஸ்ஐ பேராலய மத போதகர்கள் ஜெயசீலன், தனசேகர் உட்பட 3 பேர் சென்னையில் இருந்து இன்று காலை ஆந்திர மாநிலம் நகரியில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெறும் மத போதனையில் பங்கேற்க சென்றனர். திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு கலைக்கல்லூரி அருகே சென்றபோது அவர்கள் பயணித்த கார் முன்பகுதியில் புகை வருவதை பார்த்த கார் ஓட்டுநர் சூசை என்பவர் காரை உடனடியாக நிறுத்தி அதிலிருந்து மத போதகர்களையும் இறக்கி விட்டார். அதற்குள் காரில் இருந்து தீ பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் கார் எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருத்தணி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுப்படுத்தும் முயற்சி செய்தனர் இருப்பினும் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. ஓடும் காரில் தீ பற்றிக்கொண்டு எரிந்து நாசமான சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மத போதகர்கள் மூன்று பேர் உயிர் தப்பினர்.