திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர் சுகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
விருமாண்டி, காதல், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் காதல் சுகுமார். இவர் மீது துணை நடிகை ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், எனக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளனர் என்றும் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சூழல் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் பட நடிகர் சுகுமாரனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்த நிலையில், பின்னர் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி அவருடன் நெருங்கிப் பழகி வந்த நிலையில், சுகுமார் தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து என்னிடம் நகை, பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் சுகுமார் தனக்கு திருமணம் ஆகி விட்டதால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மிரட்டல் விடுத்ததுடன் தன்னிடம் வாங்கிய பணம் நகையை கேட்டபோது தரமுடியாது என கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
துணை நடிகை புகாரின் பேரில் வடபழனி போலீசார் காதல் பட நடிகர் சுகுமாரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட துணை நடிகை கடந்த ஜனவரி மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகார் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நடிகர் சுகுமார் காவல் நிலையத்தில் ஆஜராகி துணை நடிகையிடம் வாங்கி பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி காசோலையை கொடுத்தாக தெரிகிறது. இந்நிலையில் காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் துணை நடிகை மீண்டும் நடிகர் சுகுமாரிடம் பணம் குறித்து கேட்ட போது அவர் முறையாக பதில் அளிக்காமல் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மாம்பலம் போலீஸார் துணை நடிகை புகாரில் காதல் பட நடிகர் சுகுமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணை அவமதித்தல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


