கூட்டணி அரசா? எடப்பாடி பழனிசாமி சொல்வது தான் முடிவு.. - ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்..

 
kt rajdendra balaji kt rajdendra balaji

தமிழ்நாட்டில்  தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி சொல்வது தான் இறுதி முடிவு என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த  சிறப்பு பேட்டியில், “ தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும். அதில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிருகிறோம். முதல் அமைச்சர் அதிமுகவில் இருந்து வருவார்.  அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் யாரையும் நான் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்கள் கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்.  என் நம்பிக்கை என்னவென்றால், அதிமுக மற்றும் பாஜக., அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவலான நிலையில் இருக்கிறது” என்று கூறினார்.   

eps
 
தமிழ்நாட்டில் 2026ல் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அரசு அமையும் என்றும், ஆட்சியில் பங்கு என்கிற வகையிலும்  ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது அதிமுகவினர் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  காரணம் சில தினங்களுக்கு முன்னர் தான் எடப்பாடி பழனிசாமி,  “2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றுதான் கூறினேன், ‘கூட்டணி அரசு’என கூறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.  அந்த நிலையில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமையும் என  அமித்ஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

அத்துடன், அதிமுகவில் இருந்து தான் முதல்வர் வேட்பாளர்  அறிவிக்கப்படுவார் என்று கூறிய அமித்ஷா, கூட்டணி ஆட்சி அமைந்தால் எடப்பாடி தான் முதல்வர் என்று உறுதியாக கூறவில்லை. அப்படியிருக்கையில் வேறு யாரையும் முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதா எனவும் அரசியல் வட்டாரத்தில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  ராஜேந்திர பாலாஜி,  “அமித்ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடிதான்; அவர் சொல்வதே இறுதி முடிவு. கூட்டணி குறித்த எந்த முடிவு என்றாலும் அது எடப்பாடி பழனிசாமிதான் அறிவிக்க வேண்டும். தேசிய ஜனநாயக  கூட்டணியின் “கட்டளை தளபதி” எடப்பாடி பழனிசாமிதான்” என்று தெரிவித்தார்.