விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி..!
Sep 13, 2025, 15:00 IST1757755817000
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா பகுதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நேற்றிரவு (செப்.12) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்ட மனநிலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் சென்ற சாலையின் எதிர்புறம் வந்த லாரி ஒன்று, சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. தொடர்ந்து, கட்டுப்பட்டை இழந்த லாரி, செண்டர் மீடியனில் பாய்ந்து, எதிர்புறம் வந்து கொண்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது வரிசையாக மோதி தூக்கி எறிந்தவாறு சென்றது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுமென கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


