திருச்செந்தூர் கோயிலில் பக்தரை கடித்த நாய்! ரூ.100 தரிசனத்தில் நின்றிருந்தபோது நேர்ந்த சோகம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் உள்பிரகாரத்தில் 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் நின்ற பக்தரை நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள டானா பகுதியை சேர்ந்த முத்துராமன் என்ற 60 வயது முதியவர் தனது உறவினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை வந்துள்ளார். அவர்கள் 100 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன வரிசையில் டிக்கெட் எடுத்து கோவிலுக்குள் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக தரிசனம் செய்வதற்கு காத்திருந்த நிலையில் முத்துராமன் 60 வயதான முதியோர் என்பதால் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது உள்பிரகாரத்தில் படுத்திருந்த நாய் ஒன்று முத்துராமனை காலில் கடித்துள்ளது. இதில் காலில் அவருக்கு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த 8 மணி நேரத்திற்குள் அடுத்த தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியதால் உடனடியாக அவர் அங்கிருந்து சொந்த ஊரான டானாவிற்கு வந்துள்ளார். இதையடுத்து இன்று காலையில் அவர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஏற்கனவே தமிழகம் முழுவதும் ரேபிஸ் பிரச்சனை இருந்து வரும் நிலையில் அவருக்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அவரை உள்நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரத்திற்குள் நாய் புகுந்தது எப்படி? நாய் பக்தருக்கு கடித்த சம்பவம் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


