புழுவுடன் கூடிய ஒரு தோசை ரூ.260! சாப்பிட வந்தேன் ஒரு வாய் கூட வைக்கல... புலம்பும் விவசாயி

 
தோசை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவில் புழு இருந்ததால் உணவக உரிமையாருடன் விவசாயி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,


திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் வழியாக கோவை,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  தினசரி ஆயிரக்கணக்கான மக்கள்  செல்கின்றனர். அப்படி செல்கின்ற மக்கள் உணவகங்களை தேடி  அவசரமாக உணவை அருந்தி விட்டு செல்வது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம்  பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் உயர் தர சைவம் உணவகத்தில் பழனியை சேர்ந்த சுரேஷ் என்ற  விவசாயி.அந்த உணவகத்தில் உணவு அருந்த சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் என்ன உணவு இருக்கின்றது என்று கேட்டுள்ளார். அதற்கு ஊழியர் புரோட்டா இருக்கின்றது என கூறிவிட்டு எடுத்து வந்து இலையில் வைத்துள்ளனர். அந்த புரோட்டா கெட்டுப்போன வாசம் வந்துள்ளதால், அதை சாப்பிடாமல் வாக்குவாதம் செய்துள்ளார்.

பிறகு வேறு எதேனும் உணவு இருக்கின்றதா என்று கேட்டபோது தோசை இருக்கின்றது என்று ஊழியர் தோசையை கொண்டு வந்து வைத்துள்ளார்.அதை சாப்பிட்ட விவசாயி உள்ளே புழுக்கள் இருந்ததை கவனித்து அதை சுட்டிக்காட்டி உணவக உரிமையாளரிடம் உணவில் புழுக்கள் இருப்பதை உட்கொண்டால் உணவு விஷமாகி உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  நூற்றுக்கணக்கானோர் தினமும் இங்கு வந்து உணவருந்தி விட்டு செல்வதால் அவர்கள் கதி என்னாவது?, சுத்தமான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உயர்தர சைவ உணவகத்திற்கு வந்தால் இப்படி புழுக்கள் நிறைந்த உணவை தருகிறீர்கள் நியாயமா? என்று கேட்டு விட்டு அந்தப் புழுக்கள் இருந்த உணவை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த உணவுக்கான 260 பணத்தையும்  கொடுத்துவிட்டு அந்த விபரங்களை முழுவதுமாக செல்போனில் படம் பிடித்து  வீடியோ எடுத்து அந்த காட்சிகளை சமூகவலைகளில் பரப்பி உள்ளார்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் பலகார கடைகளில் கெட்டுப்போன பொருட்களும் புழுக்கள் நிறைந்த பொருட்களும் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவசரக் கதியில் செல்லும் மக்கள் அதை பார்க்காமலே உணவை அருந்தி விட்டு செல்வதால் பல்வேறு இன்னல்களுக்கு  வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பலகார கடைகள் மாமிசம் கடைகள் என அனைத்து கடைகளையும் சோதனை நடத்தி பொது மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.