ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பு பெற்றுத்தர போலீசார் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பாராட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் துப்பு துலக்கி 15 நாட்கள் பிறகு ஜூலை 25ஆம் தேதி ஆந்திரா மாநிலம் சூலுர்பேட்டையில் பதுங்கி இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா -35 கைது செய்யப்பட்டு அவர் மீது ஆரம்பாக்கம் போலீசார் 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த ஐந்து மாதமாக இவ்வழக்கின் விசாரணை திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளி பிஸ்வகர்மா திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் 22 முறை வழக்கின் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று மாலை திருவள்ளுர் போக்சோ நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கில் தொடக்கத்தில் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயலட்சுமி மற்றும்அரசு தரப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். இவ்வழக்கில் மருத்துவ சான்றுகள் மூலமாகவும் பிற ஆதாரங்கள் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி உமா மகேஸ்வரி பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம் வழங்கிட நீதிபதி உத்தரவிட்டார். சிறுமி பிறந்த நாள் அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரி கூறுகையில், இந்த வழக்கில் 30 சாட்சிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டும் 39 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு 14 தடயங்கள் சேகரிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். 87 BNS பிரிவு கீழ் 10 வருடம் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும்
65 (2) பிரிவு கீழ் ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் 5(m) மற்றும் 6(1) pocso act 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும், 351(3) பிரிவு கீழ் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை 25 ஆயிரம் அபராதமும், 11(1) 12 pocso act 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 10 ஆயிரம் அபராதமும், 11(4) 12 pocso act 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 10 ஆயிரம் அபராதம், மொத்தம் 1,45 லட்சம் அபராதம் விதித்தும், மொத்தம் இரட்டை ஆயுள் தண்டனையும் தனித்தனியாக அனுபவிக்க தீர்ப்பு அளிக்கப்பட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


