ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
தாம்பரம் அருகே ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (42). இவர் அதே பகுதியில் மளிகைகடை நடத்திவந்தார். இவருக்கு மனைவி லக்ஷ்மி, மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்க சென்றவர் அதிகாலையில் பார்த்தபோது படுக்கையில் இல்லை, இதனால் மனைவி தேடியபோது வேறு ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உடனடியாக உறவினர்கள் நவநீதகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி 194 BNSS சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்த நவநீதகிருஷ்ணன் தன் தற்கொலைக்கு ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகமே காரணம் என்பதும் சுமார் 6 லட்சம் வரை பணத்தை உறவினர்களிடம் கடன் பெற்று நட்டமான நிலையில் கடன் கொடுத்தவர்கள் திரும்பி கேட்டதால் மன உளைச்சலில் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.


