வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்.. மாடியில் இறங்குதளம்! - சீமான் கொடுத்த 'பகீர்' வாக்குறுதி

 
seeman

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதனைத்தொடர்ந்து, காரைக்குடி மற்றும் அதனை சுற்றிவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். காரைக்குடி பேருந்து நிலையம் அருகே இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் உரையாற்றினார்.

அப்போது அவர், மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து சமாதிகள் கட்டப்பட்டிருப்பதாகவும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த உடன் சமாதிகளுக்கு சமாதி கட்டப்படும் என்று சீமான் காட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிற கட்சினர் மதுக்கடையை மூடுவதாகவும், சிறந்த கல்வி தருவதாகவும், வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதாகவும் வாக்குறுதி அளிக்கமாட்டார்கள். ஆனால், வேலை இல்லாதவர்களுக்கு நான்காயிரம் தருவேன் என்றும், படிப்பதற்கு ரூ.20 லட்சம் கடன் தருகிறேன் என்று தான் கூறுவார்கள். அந்த பணத்தை கொண்டு பள்ளிகளை மேம்படுத்தி இலவச கல்வியை வழங்கலாம், எனவே இதுபோன்ற வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளை மறைமுக விமர்சித்தார்.

மேலும், காதில் தேன் ஊற்றுவது போல வாக்குறுதிகள் இருக்கக்கூடாது, வாயில் தேனூற்ற வேண்டும். நானும் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், அதனை நிறுத்த மாடியில் இறங்குதளம், ஒவ்வொரு குடுமத்திற்கும் ஒரு கிலோ தங்கம் அளிப்பதாக வாக்குறுதிகளை அளிப்பேன். அதற்கு பணம் எங்கிருந்து வரும் என்று கேட்டால், பிற கட்சிகள் கூறும் வாக்குறுதிகளுக்கு ஏது பணமோ அதுபோலத்தான். எனவே இலவச வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வாக்காளர்களை சீமான் அறிவுறுத்தினார்.

அத்துடன், மதுக்கடைகளை மூடாமல் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த நிலை தொடர வேண்டுமென்றால் அவர்களுக்கு வாக்களியுங்கள், வேண்டாம் என்றால் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள். பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் வேண்டுமென்றால் அவர்களுக்கு (திமுக, அதிமுக) வாக்களியுங்கள். அதில் அரைக்கும் அரிசி, பருப்பு, உளுந்து போன்ற உணவுப் பொருட்கள் வேண்டுமென்றால் விவசாயி சின்னத்திற்கும் வாக்களிக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டார்.